Archives: ஏப்ரல் 2019

பெலத்தை இழந்தபின் மறுபடியும் பெலப்படுத்தும் வல்லமை

நான் எனது ஐம்பத்திநான்காம் வயதில் மில்வாக்கீ மாரத்;தான் ஓட்டத்தில் இரண்டு இலக்குகளோடு பங்கெடுத்தேன். ஒன்று அந்த ஓட்டத்தை முடிக்க வேண்டும் இரண்டாவது, அதனை ஐந்து மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும். ஒருவேளை நான் முதல் 13.1 மைல்கள் தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் போலவே இரண்டாம் பகுதியும் அமையுமாயின், நான் எடுத்துக்கொள்ளும் நேரம் மிகவும் வியப்பூட்டுவதாக இருக்கும். ஆனால், இந்த ஓட்டம் மிகவும் சோர்வடையச் செய்யும் ஒன்று இரண்டாம் பகுதியின் போது தேவையான பெலனைப் பெற்றுக் கொள்ளவே முடியவில்லை. நான் எல்லைக் கோட்டினை எட்டும் போது, என்னுடைய நிலையான ஓட்டம் தளர்ந்து, வேதனை மிகுந்த நடையாக மாறிவிடும்.

ஓடும் ஓட்டத்தில் மட்டும்தான் இரண்டாம் பகுதிக்கு பெலப்படுத்தும் ஆற்றல் தேவையா? இல்லை. அது வாழ்க்கையின் ஓட்டத்திற்கும் தான். சோர்வினால் தளர்ந்த மக்கள் தேவையான சகிப்புத் தன்மையைப் பெற்றுக்கொள்ளவும் பெலனற்று சோர்ந்த மக்களுக்கு ஆறுதலையும், ஊக்கத்தையும் கொடுக்கவும் தேவனுடைய உதவி தேவை. ஏசாயா 40:27-31ல் காணப்படுகின்ற அழகிய தீர்க்கதரிசன வார்த்தைகள் எக்காலத்திற்கும் பொருத்தமான வார்த்தைகள். அது வெறுப்படைந்து, வலுவிழந்த மக்களிடம் தேவன் அவர்களை விட்டு விடவுமில்லை, அவர்கள் மீது கரிசனையோடிருக்கிறாரெனக் கூறுகின்றது (வச. 27) நம்முடைய ஏக்கங்கள் தேவனுடைய பார்வையைவிட்டு தவறிவிடவில்லை. சோர்ந்து போகிறவர்களுக்கு அவர் பெலன் கொடுக்கின்றார், ஆறுதல் அளிக்கின்றார். தேவனுடைய எல்லையில்லாத வல்லமையும், ஆழ்ந்த அறிவும் நம்மைத் தேற்ற உறுதியளிக்கின்றன (வச. 28).

இரண்டாம் நிலைக்குத் தேவையான ஆற்றலைக் குறிக்கும் வசனங்கள் 29-31. இந்த வார்த்தைகள் நமக்குத் தரப்பட்டவை. நாம் நம் குடும்பத்தினரை கவனிக்கும் பொறுப்பிலுள்ளோமா? பொருளாதாரத் தேவையாலும், உடல்ரீதியானத் தேவையாலும் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கின்றோமா? உறவினர்களால் ஏற்பட்ட மன அழுத்தமா? ஆவிக்குரிய போராட்டங்களா? வேதவசனங்களை தியானம் செய்து, ஜெபத்தில் அவருடைய பதிலுக்காக காத்திருக்கின்றவர்களுக்கு அவருடைய பெலன் கொடுக்கப்படும்படி காத்திருக்கின்றது.

சுத்தமாக கழுவப்பட்டது

என்னால் நம்பமுடியவில்லை. என்னுடைய நீல நிற ஜெல் பேனா என்னுடைய டவலின் மடிப்புகளுக்குள் ஒளிந்து, துவைக்கும் எந்திரத்திற்குள் சென்று, உலர்ப்பானுக்குள் வந்த போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது. அவலட்சணமான நீலக்கறைகள் எல்லாத் துணிகளிலும் காணப்பட்டன. என்னுடைய வெண்மையான டவல்கள் பாழாகிவிட்டன. அதிலுள்ள கடினமான கறைகளை நீக்க எந்தவொரு நிறநீக்கியாலும் முடியாது.

நான் வெறுப்படைந்தவனாய் அந்த டவல்களை பழைய துணிகளோடு சேர்த்தபோது, பழைய ஏற்பாட்டில் எரேமியா தீர்க்கதரிசி, பாவத்தின் கொடிய விளைவுகளைப் பற்றி விளக்கியுள்ளது. என் நினைவிற்கு வந்தது. தேவனைத் தள்ளி விட்டு, விக்கிரகங்களிடம் திரும்பிய போது, இஸ்ரவேல் ஜனங்கள், தங்களுக்கும் தேவனுக்குமுள்ள உறவின்மீது நீங்காதகறையை ஏற்படுத்திக் கொண்டனர் (எரே. 2:13). “நீ உன்னை உவர் மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தை உபயோகித்தாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்கும்” என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கின்றார் (வச. 22). தங்கள் பாவங்களால் ஏற்பட்ட கறையை நீக்க அவைகளால் கூடாமற்போயிற்று என்கின்றார்.

நம்முடைய பாவக் கறையை நீக்க நாம் எடுத்துக் கொள்ளும் சுய முயற்சிகள் யாவும் வீணானவை. ஆனால், நம்மால் முடியாததை இயேசு செய்து முடித்தார். அவருடைய சாவு மற்றும் உயித்தெழுதலின் வல்லமையால் அவர் நம்மை சுத்திகரிக்கின்றார். “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவா. 1:7).

இந்த உண்மையை நாம் நம்புவதற்கு கடினமாயிருந்தாலும், உறுதியாகப் பற்றிக்கொள். இயேசுவால் நீக்க முடியாத பாவக்கறை ஒன்றுமேயில்லை. இயேசுவிடம் வரும் எவரிடமுமுள்ள பாவக் கறைகளை கழுவி சுத்திகரிக்க அவர் ஆவலாயிருக்கின்றார் (வச. 9). கிறிஸ்துவின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நாம், ஒவ்வொரு நாளும் விடுதலையோடும், நம்பிக்கையோடும் வாழ முடியும்.

அது யார்?

ஒரு மனிதன் தன் வீட்டின் வெளியே ஒர் பாதுகாப்பு கேமராவைப் பொருத்திய பின்னர் அந்த அமைப்பு சரியாக இயங்குகின்றதா என்பதைச் சோதிப்பதற்காக அதன் படங்களைப் பார்வையிட்டார். அதில். ஓர் அகன்ற மார்புடைய கரிய உடையணிந்த ஓர் உருவம் அவருடைய முற்றத்தில் உலா வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் இன்னும் சற்று கூர்ந்து அந்த மனிதன் என்ன செய்கிறாரென கவனித்தார். அப்பொழுது அங்கு நடமாடிய மனிதன் அறிமுகமானவர் போலத் தெரிந்தார். கடைசியாக. அவருடைய விட்டின் பின்புறத்தில் எல்லைக்குள் நடமாடிய அந்த நபர் வேறு யாருமல்ல, தன்னுடைய உருவம் தான் அதில் பதிந்துள்ளது எனக் கண்டுகொண்டார்!

சில சந்தர்ப்பங்களில் நாம் நம்முடைய உடலைவிட்டு வெளியே வந்து நம்மைப் பார்க்கக் கூடுமானால், நம்மை எப்படிப்பட்டவராகப் பார்ப்போம்? தாவீதின் இருதயம் கடினப்பட்டது. வெளியேயிருந்து அவனைக் குறித்து அவனைப்பார்க்கும்படியாக அவனுக்கு ஒரு தேவை ஏற்பட்டது. தேவன் அவனைக் காணும் கண்ணோட்டத்தோடு, பத்சேபாளுடன் அவனுடையப் பங்கினை அவன் பார்த்தபோது, தேவன் அவனை விடுவிக்கும்படி நாத்தானை அனுப்புகின்றார் (2 சாமு. 12).

நாத்தான் தாவீதிடம் ஓர் ஐசுரியவான் தன் விருந்தாளியை உபசரிக்க, ஓர் ஏழை மனிதன் வளர்த்த ஒரேயொரு ஆட்டுக்குட்டியை எடுத்துக் கொண்ட கதையைக் கூறுகின்றான். ஐசுரியவானிடம் மந்தை, மந்தையாக ஆடுகளிருந்த போதிலும் அவன் அந்த ஏழையின் ஒற்றை ஆட்டைப் பிடித்து அடித்து சமைத்து விட்டான். இந்தக் கதையிலுள்ள ஐசுரியவான் தாவீது தான் என நாத்தான் குறிப்பிட்டபோது தான் தாவீது தான் உரியாவிற்கு இழைத்த கொடுமையை உணர்கின்றான். அதன் விளைவுகளை நாத்தான் தெரிவிக்கின்றான். அதில் முக்கியமானதென்னவெனில், அவர் தாவீதிடம், “கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்” (வச. 13) என்பதே.

தேவன் நம் வாழ்விலுள்ள பாவச் செயல்களை வெளிப்படுத்துவதன் நோக்கம், நம்மைத் தண்டிப்பதற்கு அல்ல நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு, நாம் காயப்படுத்தினவர்களோடு மனம் பொருந்தவே நமக்குதவுகின்றார். மனந்திரும்புதல் மூலம் தேவனோடுள்ள உறவை நாம் மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடிகிறது. தேவனோடு புதுப்பிக்கப்பட்ட உறவை ஏற்படுத்திக்கொள்ள மனந்திரும்புதல் வழிவகுக்கின்றது. தேவன் தரும் மன்னிப்பு, கிருபையின் வழியே அவருடன் நெருங்கிச் சேர முடிகிறது.

கிழிக்கப்பட்ட திரை

எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிமுழுவதும், அது ஓர் இருண்ட மற்றும் துயரம் நிறைந்த நாளாகக் காணப்பட்டது. பட்டணத்தின் மதிற்சுவருக்கு வெளியே ஒரு மலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக திரள் கூட்ட மக்களை தன்னைப் பின்பற்றும்படி கவர்ந்திழுத்த ஒரு மனிதன், ஒரு கோர மரச்சிலுவையில் வேதனையாலும், அவமானத்தாலும் நிறைந்தவராய் தொங்கிக் கொண்டிருக்கின்றார். துக்கிப்பவர்களின் அழுகையும்,துயரம் நிறைந்த ஓலமும் கேட்கின்றது. பகலின் நடுவேளையில் சூரியன் தன் ஒளியினால் வானைப் பிரகாசிக்கச் செய்யாமல் மறைந்தது. சிலுவையில் அந்த மனிதனின் கொடுமையான வேதனைகள் முடிவிற்கு வந்தபோது அவர் உரத்த குரலில், “முடிந்தது” என்றார் (மத். 27:50, யோவா. 19:30).

அதே வேளையில் பட்டணத்திற்குள்ளேயிருந்த பெரிய தேவாலயத்தில் மற்றொரு சத்தம் கேட்கின்றது. அது ஒரு துணி கிழிக்கப்படும் சத்தம். அதிசயமாக எந்தவொரு மனிதனின் உதவியும் இல்லாமல், ஒரு பெரிய தடிமனான திரை, தேவாலயத்தில் பரிசுத்த ஸ்தலத்தையும் வெளிப்பகுதியையும் பிரித்த அந்தத் திரை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது (மத். 27:51).

அந்த கிழிக்கப்பட்ட திரை சிலுவையின் உண்மையை வெளிப்படுத்தியது. இப்பொழுது நாம் தேவனிடம் செல்லுவதற்கான ஒரு புதிய வழியைத் திறந்தது. சிலுவையில் தொங்கிய மனிதன் இயேசு தன்னுடைய இரத்தம் முழுவதையும் நமக்காக பலியாகச் சிந்திவிட்டார். இதுவே உண்மையும், போதுமானதுமான கடைசி பலி. இந்த பலியை (எபி. 10:10) விசுவாசிக்கிற யாவரும் பாவ மன்னிப்பை பெற்று தேவனோடுள்ள உறவில் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம் (ரோ. 5:6-11).

அந்த முதல் பெரிய வெள்ளிக்கிழமையின் இருளினூடே நாம் மிகச் சிறந்த செய்தியைப் பெற்றுக் கொண்டோம். நம்மை பாவத்திலிருந்து மீட்டு, தேவனோடு நாம் என்றென்றும் உறவை அனுபவிக்கும்படி இயேசு நமக்கு ஒரு புது வழியைத் திறந்துள்ளார் (எபி. 10:19-22). இந்த கிழிக்கப்பட்ட திரையின் செய்தியைக் கொடுத்த தேவனுக்கு நன்றி.